திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலிலுள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்துவந்தவர் ஜார்ஜ் (29). இவர் ஆவடியிலுள்ள 5-வது பட்டாலியனில் ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றிவந்தார். இவரின் மனைவி பிரணா. இந்தத் தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், ஜார்ஜ் வீட்டின் படுக்கையறையில் தூக்குப்போட்டு நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டார். அதனால் அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி கொடுத்த தகவலின்படி திருமுல்லைவாயல் போலீஸார், காவலர் ஜார்ஜின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் ஜார்ஜ் மரணம் குறித்து வழக்கு பதிவுசெய்த திருமுல்லைவாயல் போலீஸார், அவரின் மனைவி பிரணாவிடம் விசாரித்தனர். அப்போது சம்பவத்தன்று இரவு ஜார்ஜ் மது அருந்திவிட்டு வெளியில் செல்ல முயன்றதை அவரின் மனைவி தடுத்ததாகத் தெரிகிறது. அதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகே காவலர் ஜார்ஜ், தற்கொலை செய்திருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீஸார் காத்திருக்கிறார்கள்.
இது குறித்து போலீஸார் நம்மிடம் பேசுகையில், “படுக்கையறைக்குச் சென்ற காவலர் ஜார்ஜ், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரின் மனைவி விசாரணையின்போது தெரிவித்தார். கணவன், மனைவிக்கு இடையே எதற்காகத் தகராறு ஏற்பட்டது என விசாரித்துக்கொண்டிருக்கிறோம். தற்கொலை செய்துகொண்ட ஜார்ஜின் செல்போனையும் ஆய்வு செய்துவருகிறோம். விசாரணைக்குப் பிறகுதான் காவலர் ஜார்ஜின் மரணத்துக்கான காரணம் தெரியவரும்” என்றனர்.

source